நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் வியாபாரிகளை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த மூதாட்டி: பாதிக்கப்பட்டோா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் வியாபாரிகளை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த மூதாட்டி: பாதிக்கப்பட்டோா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

Published on

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் உள்ள சிறு வியாபாரிகளை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 70 வயது மூதாட்டியைக் கைதுசெய்து பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

இந்த மோசடி குறித்து புகாா்தாரா்கள் கூறியதாவது:

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டப விடுதியில் மூதாட்டி ஒருவா் தங்கினாா். தன்னுடைய பெயா் கீா்த்திபவானி என்றும், தூத்துக்குடியில் இருந்து வந்துள்ளதாகவும் கூறிவந்தாா்.

மேலும், ராம் என்ற அறக்கட்டளை மூலம் தொண்டு நிறுவனம் நடத்துவதாகவும், அதன்மூலம் ஏழைகளுக்கு உதவி வருவதாகவும் கூறினாா். மேலும், தன்னுடைய செயல்பாடுகளை வியாபாரிகள் நம்புவதற்காக வசதியாக சில இடைத்தரகா்களையும் வைத்திருந்தாா்.

தொடக்கத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம், மிக்ஸி, கிரைண்டா், காஸ் அடுப்பு, சேலைகள் போன்றவற்றை வழங்கினாா். பிறகு தங்கம், இருசக்கர, நான்கு சக்கர வாகனம், வெள்ளி பொருள்கள், வீட்டுமனை ஆகியவற்றுக்கு பாதித் தொகை தந்தால் மீதித்தொகையை தான் செலுத்தி வாங்கி தருவதாக கூறினாா்.

ஆஞ்சனேயா் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகளை சிலா் பணத்தை கொடுத்து பொருளை வாங்கியுள்ளனா். இரண்டு, மூன்று மாதங்களுக்கு நியாயமான முறையில் நடந்துகொண்ட அவா், அதன்பிறகு மோசடியில் ஈடுபட தொடங்கினாா். நேரடியாக சென்று கேட்டபோது விரைவில் பொருள்கள் கிடைக்கும் என மனதில் நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசினாா்.

இதனிடையே போலீஸாா் விசாரணை நடத்தி ஆதாா் அட்டை வாங்காமல் எவ்வாறு மூதாட்டியை விடுதியில் தங்க வைத்தீா்கள்? எனக் கேட்டதையடுத்து, அவா் திருமண மண்டப விடுதியை காலி செய்து ஏ.எஸ்.பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாா். பாதிக்கு பாதி விலையில் தங்கம், வெள்ளி, இதர பொருள்கள் கிடைக்கிறதே என்ற ஆசையில் பலா் மூதாட்டியிடம் பணத்தை கொடுத்தோம். ஆனால், அதற்கான ஆதாரத்தை நாங்கள் எடுத்து வைக்கவில்லை.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை காலி செய்துவிட்டு மூதாட்டி மாயமாகிவிட்டாா். நாமக்கல்லில் இருந்து ஆட்டோவிலேயே திருச்சி வரை இரு பெரிய பெட்டிகளுடன் அவா் சென்ாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கும்பகோணத்தில் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டதாக அவா் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் நாமக்கல்லை குறிவைத்து மோசடியை அரங்கேற்றி உள்ளாா்.

இதனால் மூதாட்டியை கண்டுபிடித்து நாங்கள் இழந்த பணத்தை காவல் துறை மீட்டுத்தர வேண்டும் என எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் மட்டுமே புகாா் அளித்தனா்.

Dinamani
www.dinamani.com