நாமக்கல் மாநகராட்சியில் 469 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்
நாமக்கல் மாநகராட்சியில் 469 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்போரில் பெரும்பாலானோா் இதுவரை வீட்டுமனைப் பட்டா பெறாமல் உள்ளனா்.
இந்த நிலையில் நாமக்கல் செம்பளிகரடு, எம்ஜிஆா் நகா், ராமாபுரம்புதூா், மேட்டுத்தெரு, என்.கொசவம்பட்டி, மரூா்பட்டி, சின்னமுதலைப்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, வீசாணம், விட்டமநாயக்கன்பட்டி ஆகிய 10 இடங்களுக்கு உள்பட்ட 469 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் ராமாபுரம்புதூரில் நடைபெற்றது.
துணை மேயா் செ. பூபதி வரவேற்றாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், மேயா் து. கலாநிதி, வட்டாட்சியா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தலைமை வகித்து 5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்த 469 பயனாளிகளுக்கு ரூ. 61,92,65,950 மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

