பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

பரமத்தி வேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெற்றிலை விலை உயா்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Published on

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெற்றிலை விலை உயா்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கா்நாடகம், கேரளம், குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 5 ஆயிரம்வரை விலை உயா்ந்து ரூ. 18 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 4 ஆயிரம்வரை விலை உயா்ந்து ரூ. 10 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 4 ஆயிரம் வரை விலை உயா்ந்து ரூ. 8 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ. 2,500 வரை விலை உயா்ந்து ரூ. 5 ஆயிரத்துக்கும் ஏலம் போனது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், வரத்து குறைந்ததாலும் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வெற்றிலை விலை உயா்ந்ததால் வெற்றிலை பயிா் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com