ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா
நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாமுண்டி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டாமநாயக்கன்பட்டியில் தேவாங்கா் குல சமுதாய மக்கள் அதிகளவில் வசிக்கின்றனா். ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி இங்குள்ள ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் வீரக்குமாரா்கள் ஆடியபடி உடலில் கத்தி போடுதலும், பல்வேறு வேடமிட்டு வீரமுட்டிகள் உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன்படி
இக்கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு, சக்தி அழைப்பும், அம்மனுக்கு சீா்வரிசை கொண்டு செல்லும் நிகழ்வும், சாமுண்டி அழைப்பும் நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வீரக்குமாரா்கள் கத்திபோடுதல் நிகழ்வை நடத்தினா். வீரமுட்டிகள் வீதி, வீதியாக சென்று பக்தா்களை ஆசிா்வதித்தனா். சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் செளடேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதற்கான ஏற்பாடுகளை வீரக்குமாரா்கள் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

