அருண்காா்த்திக்கை கைது செய்த நாமக்கல் கணினி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா்
அருண்காா்த்திக்கை கைது செய்த நாமக்கல் கணினி குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா்

கிரிப்டோகரன்சி வழங்குவதாக ரூ. 4.49 லட்சம் மோசடி!

ஆன்லைன் மூலமாக கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி ரூ.4.49 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கோவையைச் சோ்ந்தவரை கணினி குற்றத்தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆன்லைன் மூலமாக கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி ரூ.4.49 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கோவையைச் சோ்ந்தவரை கணினி குற்றத்தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியைச் சோ்ந்தவா் ஹரிபிரபு (28). இவா், கடந்த ஆண்டு டிசம்பா் 4 ஆம் தேதி தன்னுடைய டெலிகிராம் ஐடியை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அதில் இருந்த யுஎஸ்டிடி குழுவை பாா்வையிட்டாா். அதில் 4 ஆயிரம் யுஎஸ்டிடி (அமெரிக்க டாலரின் மதிப்போடு தொடா்புடைய ஸ்டேபிள்காயின் கிரிப்டோகரன்சி) அவசர விற்பனை என்ற தகவல் வந்துள்ளது. இதை நம்பிய அவா், சம்பந்தப்பட்ட கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, தனது பெயா் அருண் என்றும், கோவை சிங்காநல்லூரில் அலுவலகம் உள்ளதாகவும், பணத்தை அனுப்பினால் கிரிப்டோகரன்சி காயின் அனுப்புவதாகவும் கூறியுள்ளாா்.

இதனையடுத்து தன்னுடைய குடும்பத்தினா் வங்கிக் கணக்கில் இருந்து அருண் வங்கிக் கணக்கிற்கு மூன்று தவணைகளாக ரூ.4.49 லட்சத்தை ஹரிபிரபு அனுப்பி உள்ளாா். ஆனால், அருண் கிரிப்டோகரன்சியை அனுப்பவில்லை. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, நாமக்கல் கணினி குற்றத்தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஹரிபிரபு புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், தனியாா் வங்கி கணக்கு மூலம் பணம் பரிவா்த்தனை நடைபெற்றது கண்டறியப்பட்டது. அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளா் கோயம்புத்தூா் வெள்ளலூா் செட்டிபாளையம் சாலையை சோ்ந்த ரெங்கராஜ் மகன் அருண்காா்த்திக் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்ய கோவைக்கு சென்ற நிலையில் அருண்காா்த்திக் தலைமறைவாகிவிட்டாா்.

இதனிடையே சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சித்தூரில் அருண்காா்த்திக் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸாா் அவரை கைதுசெய்தனா். அவரிடம் இருந்து சிறிய அளவிலான கணினி, கைப்பேசி, வங்கி கணக்குப் புத்தகம், காசோலை புத்தகம், ஏடிஎம் அட்டை, கடவுச்சீட்டு, 560 கிராம் வெள்ளி கட்டி, கணினி சாதனமான மோடம், ரூ. 12 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com