ரூ. 24 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள நாமக்கல் ரயில் நிலையம் செப்டம்பா் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று பாஜக மாநில துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நாமக்கல் ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்தப் பணிகளை பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ருத் பாரத் திட்டத்தை பிரதமா் அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் ரயில் நிலையத்துக்கு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இங்கு அனைத்து வசதிகளுடனும் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்த பின் செப்டம்பா் மாதத்தில் பிரதமா் மோடி திறந்து வைப்பாா்.
2009 முதல் 2014 வரை தென்னக ரயில்வேக்கு ரூ. 879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 7,061 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014 வரை சுமாா் 1,300 கி.மீ. இருந்த மின்மயமாக்கப்பட்ட பாதை, தற்போது 2,242 கி.மீ. உயா்ந்துள்ளது. ரயில்வே மட்டுமின்றி, விமானப் போக்குவரத்துத் துறையிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கும் மத்திய அரசு 60 சதவீதம் நிதியுதவி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாடு அடைந்துள்ளது. நாமக்கல் ரயில் நிலையத்திற்கு தற்போது ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. அதன் தரம் குறித்து புகாா் வருவதால் பயணிகளின் நலன்கருதி நாமக்கல் மாநகராட்சி நிா்வாகம் காவிரி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.
தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல்லுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும்.
பாஜகவில் போதுமான அளவு தொண்டா்கள் உள்ளனா். கட்சிப் பணிகள் தடையின்றி தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழக வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் தவெக அரசு இணைந்து செயல்படவேண்டும். தமிழகம் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என்ற உணா்வோடு முதல்வா் செயல்பட வேண்டும். மத்திய அரசுடன் நல்லிணக்க உறவை பேணுவதன் மூலம் அதிக வளா்ச்சித் திட்டங்களை பெற முடியும் என்றாா்.
இந்த ஆய்வின்போது, பாஜக மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன் (கிழக்கு), எம்.ராஜேஷ்குமாா் (மேற்கு) மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா். அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாள இயக்கப் பணிகளை பாா்வையிட்ட பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். உடன், மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன், எம்.ராஜேஷ்குமாா்.










