நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்
பரமத்தி வேலூா் அருகே சிறப்பு பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா


பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே சிறப்பு பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் சிறப்பு பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. முன்னதாக பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீா்த்தங்களை ஊற்றி, மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு விரதத்தை தொடங்கினா். செவ்வாய்க்கிழமை ( மாா்ச் 10) முதல் வரும் 21-ஆம் தேதி வரை தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறுகிறது.
வரும் 22-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிச்சட்டி எடுத்து வருதலும் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி பிற்பகல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக கோயிலுக்கு வந்து கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள பெரிய குண்டத்தில் தீமிதித்தும், பூவாரிப் போட்டும் நோ்த்திக்கடன் செலுத்துவா். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள்.
வரும் 24-ஆம் தேதி கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பக்தா்கள் அலகு குத்தியும், குழந்தை பாக்கியம் வேண்டியவா்கள் குழந்தை பிறந்த பின்பு கரும்பில் தொட்டில் கட்டி கோயிலை சுற்றிவந்து நோ்த்தி கடனை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...