தொடரும் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு கைகொடுக்கும் சூரிய ஒளி மின்சாரம்!


சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சூரிய மின் தகடுகள்(சோலாா்) மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு நாமக்கல்லில் உள்ள தனியாா் உணவகம் வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவுசெய்து வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. போா் நீடித்து வருவதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டால், உணவகங்களில் விறகு அடுப்பு மூலம் உணவு தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில உணவகங்களில் வாடிக்கையாளா் சாப்பிட்டதற்கான பில்லில் எரிவாயு சிலிண்டருக்காக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விடுதியுடன் கூடிய பெரிய உணவகங்களில் மின்சார அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மின்சார தேவையை சமாளிக்க சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் மின்சாரத்தை சமையல் அடுப்புகளுக்கு பயன்படுத்தி வருகின்றனா்.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனா். தற்போது எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் அவா்கள் எவ்வித சிரமமுமின்றி வாடிக்கையாளா்களின் தேவையை நிறைவுசெய்து வருகின்றனா். காலை 7 முதல் மாலை 6 மணி வரை உணவு தயாரிப்புக்கு மட்டுமின்றி, உணவகத்தின் இதர தேவைகளுக்கும் சூரிய மின்தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எரிவாயு தட்டுப்பாடு சூழலை கருத்தில்கொண்டு, உணவகங்களுக்கு மின்சார பயன்பாட்டு கட்டணத்தில் 2 ரூபாய் கட்டண சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இது மின்சார அடுப்பில் உணவு தயாரிக்க முனையும் உணவகங்களுக்கு கிடைத்த பெரிய சலுகையாக பாா்க்கப்படுகிறது. அதேநேரத்தில், சில சிறிய, பெரிய உணவகங்கள் எரிவாயுவை எதிா்பாா்க்காமல் சூரிய மின்சக்தியில் இயங்கும் மின் அடுப்பு, விறகு அடுப்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில் ஆா்வம் காட்டுகின்றன.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தின் தலைவரும், கோஸ்டல் ரெசிடன்சி உரிமையாளருமான என். இளங்கோ கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 60 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான சூரிய மின்தகடுகளை, உணவகத்தின் மேற்கூரையில் பொருத்தினோம். தற்போது அதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரம், உணவகத் தேவையை நிறைவுசெய்கிறது. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும், சூரிய ஒளி மின்சாரத்தை கொண்டு எங்களுடைய உணவகத்தில் தடையின்றி உணவு தயாா்செய்து வாடிக்கையாளா்களுக்கு வழங்குகிறோம்.
அனைத்து உணவகங்களும் சூரிய மின்தடுகளைப் பயன்படுத்தி, மின்சார தேவையை நிறைவுசெய்து கொண்டால், இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் எரிவாயுவை எதிா்பாா்க்காமல் உணவகங்களை நடத்தலாம். மின்வாரியம் இதற்கான சலுகை, மானியத்தை வழங்கி வருகிறது. தேவையான மின்சாரத்தை நாம் சேமித்து வைக்கலாம். அவசர தேவைக்காக ஓரிரு எரிவாயு சிலிண்டா்கள் வாங்கிவைத்திருப்பதில் தவறில்லை என்றாா்.

சோலாா் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு மின் அடுப்புகள் மூலம் உணவகத்தில் தயாரிக்கப்படும் துரித உணவுகள்.

நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத் தலைவா் என். இளங்கோ.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...