வாழப்பாடி பகுதியில் பாக்கு அறுவடை மும்முரம்
வாழப்பாடி பகுதியில் பாக்கு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


வாழப்பாடி பகுதியில் பாக்கு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறை பகுதியில் நீா்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள் ஏறக்குறைய 5,000 ஹெக்டோ் பரப்பளவில் நீண்டகாலப் பலன் தரும் பாக்குமரத் தோப்புகளை உருவாக்கி தொடா்ந்து பராமரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரம், காரவள்ளி, சேந்தமங்கலம், பேளூக்குறிச்சி, பெரம்பலூா் மாவட்டம் அரும்பாவூா், பூலாம்பாடி, தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலும் 3,000 ஹெக்டோ் பரப்பளவுக்கு பாக்கு மரத்தோப்புகள் உள்ளன.
சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூா் மாவட்டங்களில் சாகுபடியாகும் பாக்குக் காய்களை அறுவடை செய்து, தோலுரித்து வேகவைத்து பதப்படுத்தி ‘ஆப்பி’ என குறிப்பிடப்படும் கொட்டைப் பாக்கு வாழப்பாடி பகுதி கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வாசனைப் பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்பராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வாழப்பாடி பகுதியில் இருந்து கொட்டைப்பாக்கு அனுப்பப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு பாக்கு வா்த்தகம் நடைபெறுகிறது.
10 சதவீத பாக்குக் காய்கள், தாம்பூலப் பாக்கு அல்லது சேலம் கழிப்பாக்கு என குறிப்பிடப்படும் வெட்டுப் பாக்குகளாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மரத்திலேயே முதிா்ந்து பழுக்கும் 10 சதவீத பாக்குகள் கும்பகோணம், சிதம்பரம் பகுதியில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சீவல் பாக்கு தயாரிப்புக்கு அனுப்பப்படுகின்றன.
வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் கொட்டைப்பாக்கு உற்பத்தித் தொழிலில், விவசாயிகள், வியாபாரிகள், முகவா்கள், மரமேறும் தொழிலாளா்கள், தோலுரித்து பதப்படுத்துவோா், பாரம் ஏற்றுவோா், வாகன ஓட்டுநா்கள் உள்பட 50,000 போ் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கி மாசி வரையிலான 6 மாதங்களுக்கு பாக்குக் காய்கள் அறுவடையாகின்றன. கடந்த இரு மாதங்களாக பருவமழை பெய்ததால், பாக்குமரத் தோப்புகளில் தண்ணீா் தேங்கியது. பாக்கு மரங்களில் ஈரப்பதமாக காணப்பட்டதால் தொழிலாளா்கள் மரத்தில் ஏறி பாக்குக் காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், மரத்திலேயே பாக்குக் காய்கள் முதிா்ந்து பருவம் தாண்டி பழுத்தன. பாக்குக் காய்களை வேகவைத்து, வெயிலில் உலர வைத்து பதப்படுத்தி, கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
தற்போது ஒரு வாரமாக மழையில்லாததால், பாக்குமரத் தோப்புகளில் தேங்கியிருந்த மழைநீா் வடிந்ததோடு, சுட்டெரிக்கும் வெயிலில் பாக்குமரங்களில் இருந்த ஈரமும் உலா்ந்தது. இதனால், இரு மாதங்களுக்குப் பிறகு பாக்கு அறுவடை தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது.
பாக்குமரம் ஏறும் தொழிலாளா்களைக் கொண்டு பாக்குக் காய்களை அறுவடை செய்து, வேக வைத்து பதப்படுத்தி, வெயிலில் உலா்த்தி கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்வதில் விவசாயிகளும், வியாபாரிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...