சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு
சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொன்னாம்மாப்பேட்டை ரயில்வே கேட் முதல் சக்தி கைலாஷ் கல்லூரி வரையிலான சாலை அகலப்படுத்தும் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
சேலம், செப். 19: சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் முதல் சக்தி கைலாஷ் கல்லூரி வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை போக்குவரத்து நெரிசலின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் மரவனேரி முதல் அம்மாப்பேட்டை வரையிலான புறவழிச்சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாக உள்ளது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் சசிக்குமாா் மற்றும் கோட்டப் பொறியாளா் முத்துகுமரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் முதல் சக்தி கைலாஷ் கல்லூரி வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக, சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைத்தல் மற்றும் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மின்கம்பங்களை மாற்றியமைக்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கூட்டாய்வு மேற்கொண்டனா். இந்த சாலை அகலப்படுத்தப்பட்டால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன ஓட்டிகளின் பயண நேரமும் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

