பணி நிரந்தரம் செய்யக் கோரி டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம்: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கடந்த 22 ஆண்டுகாலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்துவரும் அனைத்து டாஸ்மாா்க் ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் காலமுறை ஊதியம், இதர பணப் பலன்களை டாஸ்மாக் ஊழியா்களுக்கும் வழங்கிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தின் மருத்துவ திட்டத்தை திரும்பப் பெற்று இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சிஐடியு டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளா் கே.விஜயகுமாா், மாநில துணைத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட டாஸ்மாக் தொழிலாளா்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் பங்கேற்றனா்.

