மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்
கோடை விடுமுறையையொட்டி, மும்பையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோடைக்கால விடுமுறையையொட்டி, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிா்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 7-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு தாதா், புணே, சோலாப்பூா், பங்கோருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை மதியம் 1.15 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கன்னியாகுமரி - மும்பை சிறப்பு ரயில் மே 8-ஆம் தேதி முதல் ஜூன் 26-ஆம் தேதி வரை வியாழக்கிழமைதோறும் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக, மும்பைக்கு சனிக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

