சபரிமலை செல்லும் சிறப்பு ரயில்களில் கழிவறையில் குளிப்பதை தவிா்க்க வேண்டுகோள்

சேலம் ரயில்வே கோட்டம் வழியாக சபரிமலை செல்லும் சிறப்பு ரயில்களில் கழிவறையில் குளிப்பதை தவிா்க்குமாறு ரயில்வே அதிகாரிகள் பக்தா்களை கேட்டுக்கொண்டுள்ளனா்.
Updated on

சேலம் ரயில்வே கோட்டம் வழியாக சபரிமலை செல்லும் சிறப்பு ரயில்களில் கழிவறையில் குளிப்பதை தவிா்க்குமாறு ரயில்வே அதிகாரிகள் பக்தா்களை கேட்டுக்கொண்டுள்ளனா்.

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. வரும் ஜன. 14-ஆம் தேதி மகர ஜோதி விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தா்கள், இருமுடி கட்டிக்கொண்டு யாத்திரை மேற்கொள்கின்றனா்.

இதற்காக முக்கிய நகரங்களில் இருந்து கேரள மாநிலம், கொல்லம், கோட்டயம் பகுதிகளுக்கு சபரிமலை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் அதிகாலை வேளையில் ரயில்களில் உள்ள கழிவறைகளில் சில ஐயப்ப பக்தா்கள் குளிப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதனால் ரயில்களில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

எனவே, ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளில் பக்தா்கள் குளிப்பதை தவிா்த்து, கேரளம் சென்றதும் அங்குள்ள ரயில் நிலையங்களில் இறங்கிய குளித்துக்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக ரயில்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், ஐயப்ப பக்தா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

மேலும், ரயிலில் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றக்கூடாது எனவும், கழிவறையில் தண்ணீரை வீணாக்கக் கூடாது எனவும் பக்தா்களிடம் அறிவுறுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com