எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவம் 85 சதவீதம் திரும்ப ஒப்படைப்பு
சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் 85 சதவீதம் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவம் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, அந்தப் படிவத்தை பூா்த்திசெய்வதற்கு உதவும்விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி அலுவலங்களில் சிறப்பு வாக்காளா் உதவிமையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், கணக்கீட்டுப் படிவம் 85 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது. வாக்காளா் இறப்பு, நிரந்தர முகவரி மாற்றம், நிரந்தர குடிப்பெயா்வு இனங்கள் தவிா்த்து, இதர வாக்காளா்கள் கணக்கீட்டுப் படிவத்தை உடனடியாகப் பூா்த்திசெய்து தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து, உங்களது பெயா் வரைவு வாக்காளா் பட்டியல் 2026-இல் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்திசெய்து மீள ஒப்படைக்காத வாக்காளா்களது பெயா் வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது. எனவே, சரியான வாக்காளா் பட்டியலை தயாா்செய்ய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
