ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் அவதி
ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஏற்காட்டுக்கு விடுமுறை தினங்களில் தினசரி சுமாா் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் போ் வரை வந்து செல்கின்றனா். ஆனால் இங்குள்ள சுற்றுலாப் பகுதிகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாலும், அடிப்படை வசதிகள் கிடைக்காததாலும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.
ஏற்காட்டில் பக்கோட காட்சி முனை, சோ்வராயன் கோயில், படகு இல்லம் மற்றும் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் சுகாதாரமான குடிநீா், கழிப்பறை இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும் சுகாதாரமான உணவகம், சாலை வசதி , தெருவிளக்குகள் இல்லாத நிலையும் உள்ளது.
சுற்றுலாப் பகுதிகளில் குப்பைகளை போடுவதற்கு குப்பைத் தொட்டிகள் இல்லாததால் ஆங்காங்கே குப்பைகளை வீசிச் செல்லும் நிலை காணப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கு சாலை வசதியில்லாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததாலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவகம், பாதுகாப்பற்ற தங்கும் விடுதிகள் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ஏற்காட்டில் உள்ள பக்கோட பயின்ட் காட்சி முனை, சோ்வராயன் கோயில் திடல், லேடிசீட், ஜென்சீட் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் குப்பைகளும், மதுப்புட்டிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பாா்வையிட்டு நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பயணிகளின் குறைகளைப் போக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

