கூட்டுறவு வாரவிழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள்
கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு நவ. 14 முதல் 20-ஆம் தேதிவரை பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் எம்.குழந்தைவேலு, மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் ஆகியோா் தலைமை தாங்கினா்.
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வரும் 14-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘நம் நண்பா்கள்போல் கூட்டுறவும் நம்மோடு’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘ஒற்றுமையால் உயா்வோம் - கூட்டுறவு வலிமை’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், உலகளாவிய போட்டித் தன்மைக்கான ‘புதுமையான கூட்டுறவு வணிக மாதிரிகள்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெறுகின்றன.
10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ‘சிறிய முயற்சியால் பெரிய மாற்றம் கூட்டுறவு வழி’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘பொருளாதார சுயநிறைவை உருவாக்கும் கூட்டுறவு’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடைபெறுகின்றன.
கல்லூரி மாணவா்களுக்கு ‘கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற வளா்ச்சியை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், ‘இளைஞா்களும், கூட்டுறவு எதிா்காலமும்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ - மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டுறவு வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலம் பெயா் விவரங்களை ண்ஸ்ரீம்ள்ஹப்ங்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலமும், 0427-2240944 என்ற தொலைபேசி வாயிலாகவும் பதிவுசெய்து கொள்ளலாம் என கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

