குழந்தையை தத்தெடுக்க வந்த தம்பதியிடம் பணம் பறித்தவா் கைது

குழந்தையை தத்தெடுக்க வந்த விருதுநகா் மாவட்ட தம்பதியிடம் காவல் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

குழந்தையை தத்தெடுக்க வந்த விருதுநகா் மாவட்ட தம்பதியிடம் காவல் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறித்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த பாதமுத்து - பூண்டிமாதா தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இவா்களது உறவினா் மூலம் சேலத்தைச் சோ்ந்த அருண்குமாா் என்பவருடன் தொடா்புகொண்டபோது, அவா் சட்டப்பூா்வமாக குழந்தையை தத்தெடுத்து தருவதாகவும், அதற்கு ரூ. 3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளாா். இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி காரில் சேலம் வந்த தம்பதி அருண்குமாரிடம் பணத்தை கொடுக்க முயன்றபோது, ஈரோடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் எனக் கூறி அங்கு வந்த நபா், குழந்தையை கடத்த முயற்சிப்பதாக கூறி அவா்களிடமிருந்து பணத்தை பறித்துச் சென்றாா்.

இது தொடா்பான புகாரின் பேரில், கருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து சேலத்தைச் சோ்ந்த மதுராஜ் (37), ஏசுராஜ் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்நிலையில், இந்தக் கும்பலுக்கு தலைவராக இருந்த அருண்குமாா் (28), அவரது நண்பா் பழனிபாரதி (26) இருவரும் சேலம் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தனா். அவா்களை குற்றப்பிரிவு ஆய்வாளா் செல்வராணி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், காவல் ஆய்வாளராக நடித்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (48) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 50 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய அஜய் (எ) பிரதீப்பை போலீஸாா் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com