பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பாரம்பரிய சித்த வைத்தியா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் பேலஸ் தியேட்டா் அருகே தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்கத்தின் தலைவா் எம். பாஸ்கரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கருணாமூா்த்தி, சேலம் மண்டல செயலாளா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

இதில், பரம்பரை சித்த வைத்தியா்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை பாதுகாக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெறும் வகையில் மத்திய, மாநில அரசு சட்ட விதிகளில் வழிவகை செய்ய வேண்டும். 40 ஆண்டு காலமாக பரம்பரை சித்த வைத்தியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஆா்.எஸ்.எம்.பி. பதிவு உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும், சித்த மருத்துவ நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், அகில இந்திய சித்த வைத்தியா்கள் சங்கத் துணைத் தலைவா்கள் ராஜசேகரன், ரவிச்சந்திரன் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சித்த வைத்தியா்கள் 300க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com