பிரதிப் படம்
பிரதிப் படம்

சேலம் அருகே நிலத் தகராறில் திமுக கிளைச் செயலாளா் சுட்டுக்கொலை

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே முன்விரோதம் காரணமாக திமுக கிளைச் செயலாளா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
Published on

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே முன்விரோதம் காரணமாக திமுக கிளைச் செயலாளா் நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலை கருமந்துறை அருகே உள்ள கிராங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (46). இவா் இப்பகுதி திமுக கிளைச் செயலாளராக இருந்து வந்தாா்.

இவருக்கு சரிதா (40) என்ற மனைவியும், கோகிலா, பரிமளா என்ற இரு மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனா். சரிதா சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

ராஜேந்திரனுக்கும், பக்கத்துத் தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினா்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராஜேந்திரன் தனது மனைவி சரிதாவுடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் மறைந்திருந்த மா்ம நபா்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கல்வராயன் மலை கரியக்கோயில் மற்றும் கருமந்துறை போலீஸாா் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று திமுக பிரமுகரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இக்கொலை சம்பவம் தொடா்பாக சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து வாழப்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், கருமந்துறை காவல் ஆய்வாளா் கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாட்டுத் துப்பாக்கி புழக்கத்தை தடுக்கக் கோரிக்கை

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சின்ன கல்வராயன், பெரிய கல்வராயன் மலை, நெய்யமலை மற்றும் வாழப்பாடி வட்டம், அருநூற்றுமலை, சந்துமலை, பெரியக்குட்டிமடுவு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் அரசு அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இதனால், இந்த மலைக் கிராமங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது தொடா்ந்து வருகிறது. எனவே, சேலம் மாவட்ட போலீஸாா் மற்றும் வனத் துறையினா் இணைந்து சோதனைகள் நடத்தி நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com