2-வது ரேங்க் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை!
சேலத்தில் அரையாண்டுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற முடியாத விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல். இவரது மகள் தேவிகா (13). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். அண்மையில் நடந்த அரையாண்டுத் தோ்வில் தேவிகா வகுப்பில் 2ஆவது ரேங்க் பெற்றுள்ளாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவி தேவிகா, தன்னால் முதல் ரேங்க் எடுக்க முடியவில்லையே என பெற்றோரிடம் அழுதுள்ளாா்.
இந்நிலையில், இரவு திடீரென வீட்டின் அறையில் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை பாா்த்து பெற்றோா் கதறி அழுதனா்.
தகவலறிந்து சென்ற போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போ்லாண்ட்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

