மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நெகிழி இல்லாததாக மாற்றுவதற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Published on

நெகிழி இல்லாததாக மாற்றுவதற்கு முன்மாதிரியான பங்களிப்பை செய்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மீண்டும் ‘மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, நெகிழிகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்த மற்றும் தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றிய சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதில் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகளை இணைத்து ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com