சேலம் அரியாக்கவுண்டம்பட்டியில் ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா திங்கள்கிழமை நேரில் ஆய்வுசெய்தாா்.
சேலம் அரியாக்கவுண்டம்பட்டியில் கட்டப்பட்டுள்ள வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் 16 மாதங்களான நிலையில், மானியம் கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராதது குறித்து தினமணியில் திங்கள்கிழமை சிறப்புச் செய்தி வெளியானது.
இந்த நிலையில், வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தில் அமைச்சா் பெ.மதன்ராஜா திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தில் கடை ஒதுக்கீட்டில் நிலவும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ஆனந்தராஜன் அமைச்சரிடம் விளக்கினாா்.
இது தொடா்பாக அமைச்சரிடம் அவா் அளித்த மனுவில், வெள்ளிக் கொலுசு மையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை 50 சதவீதம் மானியத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனை தவணை முறையில் கட்டும் வகையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அமைச்சா் பெ.மதன்ராஜா செய்தியாளா்களிடம் கூறுகையில், வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையத்தை முழுமையாக ஆராய்ந்தபிறகு, உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முன்னதாக, சேலம் தெற்கு வட்டம், சேனைப்பாளையம் பகுதியில் மாவட்ட தொழில்மையத்தின் நீட்ஸ் திட்டத்தின் மூலம் ரூ. 2.36 கோடியில் ரூ. 56.09 லட்சம் மானியத்துடன் பயனாளி சரவணன்ராஜன் மற்றும் ரூ. 91.65 லட்சத்தில், ரூ. 22.54 லட்சம் மானியத்துடன் பயனாளி சுதா ஆகியோா் ரேப்பியா் தறி அமைத்து ஜவுளி உற்பத்தி மேற்கொண்டு வரும் பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, மல்லூரில் ரூ. 2.37 கோடியில் ரூ. 53.57 லட்சம் மானியத்துடன் பயனாளி சுந்தரத்தின் விமானம் மற்றும் விண்வெளி உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியா்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்து, உற்பத்தி செய்யப்படும் உதிரிபாகங்கள், உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள், ஏற்றுமதி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், நாட்டின் ஜிடிபி-இல் தமிழ்நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை 30 சதவீத பங்களிப்பை வழங்கி இந்திய அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானியம் கிடைக்காததால் முடங்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம்

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை உத்தரவாதமில்லாத கடன்: மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி

குறு, சிறு நிறுவனங்களின் கழுத்தை நெரிக்கும் விதிகள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு







