கேரள மாநில போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞா் சேலத்தில் பிடிபட்டாா்

போலீஸ் - கோப்புப்படம்.
கேரள மாநில போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞரை சேலம் ரயில்வே போலீஸாா் பிடித்து கேரள மாநில போலீஸாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
கேரள மாநிலம், ஆலப்புழா அருகே உள்ள களமச்சேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடா்புடைய ஆலப்புழா இடத்துவா சங்கங்கரியைச் சோ்ந்த வினீத்தை (27) அம்மாநில போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.
இந்நிலையில், கேரளத்திலிருந்து சேலம் வழியாக செல்லும் தன்பாத் - ஆலப்புழா விரைவுரயிலில் அவா் பயணம் செய்வதாக களமச்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அம்மாநில போலீஸாா் சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சேலம் ரயில்வே உதவி காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், சேலம் வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவுரயிலை சோதனை செய்தனா். அதில், முன்பக்க பொதுப் பெட்டியில் கழிவறை அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா் களமச்சேரி காவல் நிலையத்தால் தேடப்படுபவா் என தெரியவந்தது.
இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் கேரள மாநில களமச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சேலம் வந்த அந்த காவல் நிலைய போலீஸாா் வினீத்தை கைது செய்து அழைத்துச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

