மானாமதுரைப் பகுதியில் நீரின்றிக் கருகும் நாற்றுகள்
மானாமதுரை, அக். 13: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் மழையை நம்பி நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்யாததால், கருகத் (படம) தொடங்கிவிட்டன. கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய


மானாமதுரை, அக். 13: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் மழையை நம்பி நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்யாததால், கருகத் (படம) தொடங்கிவிட்டன.
கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் நாற்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில், அவையும் கருகி வருகின்றன.
மானாமதுரை தாலுகாவில் பெரும் பகுதி விவசாயம் வைகைத் தண்ணீரைத்தான் நம்பியுள்ளது. தொடர்ந்து நிலவிவந்த கடும் வறட்சியால் இந்த ஆண்டு விவசாயக் காலம் தொடங்கினாலும், வைகையில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
சரிவர மழை பெய்யாததால் இப் பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அடிக்கடி பெய்த மழையால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் கடன் வாங்கி நாற்று நட்டனர்.
நாற்று முளைத்துவரும் நேரத்தில், கடந்த சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால், மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த மிளகனூர், வன்னிக்குடி, எம்.கரிசல்குளம், சோமாத்தூர், சின்னக்கண்ணனூர், அரசகுளம், குவளைவேலி, மேலப்பசலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு செய்யப்பட்ட உயர் ரக நெல் வகைகளான கோ 43, கோ 53 உள்ளிட்ட ரக நெல் நாற்றுகள் கருகத் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து மழை பெய்தால்தான் இந்த நாற்றுகளைக் காப்பற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழை இல்லாவிட்டாலும் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளும் நெல் நாற்றுகளைக் காப்பற்ற முடியாமல் உள்ளனர். இதற்குக் காரணம் அடிக்கடி ஏற்படும் மின் தடையாகும்.
மானாமதுரை பகுதியில் கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், முத்தனேந்தல், இடைக்காட்டூர், வாகுடி, பச்சேரி, விளத்தூர், வெள்ளிக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் நடவு செய்த நாற்றுகளை கிணற்றுத் தண்ணீரை வைத்துக் காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்திலிருந்த விவசாயிகள் நம்பிக்கையிலும் இடி விழுந்துள்ளது.
இக் கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
இந்த நிலை குறித்து கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் கூறியதாவது:
விவசாயப் பணிக்கு ஆள் கிடைக்கவில்லை, எல்லோரும் அரசின் 100 நாள் வேலைக்குச் சென்று விடுகின்றனர்.
கூடுதலாக கூலி கொடுத்துக் கூட்டிவந்த ஆள்களை வைத்து மழையை நம்பி நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் தொடர்ந்து மழை இல்லாதததால், கருகத் தொடங்கிவிட்டன.
இனிமேல் மழை பெய்தால் கூட இந்த நாற்றுகளைக் காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆண்டு மழையை நம்பி விவசாயம் செய்த எங்களுக்கு தொடர்ந்து மழை இல்லாததால், அறுவடை இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்கப்பட்டது. ஆனால், மானாமதுரை தாலுகா பகுதிக்கு மட்டும் பயிர் இன்சூரன்ஸ் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டும் பயிர் இன்சூரன்ஸ் செய்துள்ளோம். விவசாயம் பொய்த்துப் போனால் பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...