அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மானாமதுரையில் குறள் பரப்பும் படிப்பகம்

மானாமதுரை, அக். 27:   சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் மிகவும் பின்தங்கிய தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், கடந்த 49 ஆண்டுகளாக திருக்குறளைப் பரப்பும் நோக்கில், திருவள்ளுவர் பெயரில் நண்பர்கள் சேர்ந்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:06 pm

வாழ்வியல் வழிகாட்டி ஆர். கே

மானாமதுரை, அக். 27:   சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகரில் மிகவும் பின்தங்கிய தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில், கடந்த 49 ஆண்டுகளாக திருக்குறளைப் பரப்பும் நோக்கில், திருவள்ளுவர் பெயரில் நண்பர்கள் சேர்ந்து நடத்தி வரும் படிப்பகம் அடுத்த ஆண்டு பொன்விழாவை எதிர்நோக்கி உள்ளது.

  மானாமதுரை கன்னார் தெரு பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி. இங்கு எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறைகள் அதிகம் உள்ளதால், இப் பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளர்கள்.

  இப் பகுதி மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, இப் பகுதி நண்பர்களால் கடந்த 1960 ஆம் ஆண்டு படிப்பகம் தொடங்கப்பட்டது.

  இந்த படிப்பகத்தில் தினமும் தினசரி பத்திரிகைகள், இதழ்கள் வாங்கப்படுகின்றன. இப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தினமும் இந்த படிப்பகத்துக்கு வந்து அனைத்து பத்திரிகைகள், இதழ்களைப் படித்து தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.

  இந்தப் படிப்பகத்தில் இதுவரை திருக்குறளுக்கு உரையாக வெளிவந்த அனைத்து உரையாசிரியர்களும் எழுதிய 138 உரை நூல்களும் இருக்கின்றன. மேலும் தமிழைத் தவிர்த்து பிற மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறள் உரை நூல்களும் உள்ளன.

  கடந்த காலங்களில் இப் படிப்பகத்தின் வாசகர்களாக இருந்து தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொண்ட ஏராளமானோர் தற்போது ஆசிரியர்களாகவும் அரசுப் பணிகளிலும் உள்ளனர்.

  இந்தப் படிப்பகத்தின் ஆண்டு விழாக்களில் கடந்த காலங்களில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜீவா, பி. ராமமூர்த்தி, தவத்திரு குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ. விசுவநாதம், ம.பொ. சிவஞானம், கவிஞர் மீரா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

  இந்தப் படிப்பக வாயிலில் உள்ள திருக்குறள் நூலகப் பலகையில், தினமும் காலையில் ஒரு குறள் எழுதி, அதற்கு விளக்கத்தை எழுதி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள படிப்பகத்தின் பொறுப்பைக் கவனித்துவரும் இப் பகுதியைச் சேர்ந்த கவிஞர் மு. சோமசுந்தரபாரதி கூறியதாவது:

  கடந்த 49 ஆண்டுகளாக கன்னார் தெரு பகுதியில் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து காலை நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன.

  இதற்காகும் செலவை இப் பகுதி நண்பர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் உலக திருக்குறள் பேரவையுடன் இப் படிப்பகம் இணைக்கப்பட்டுள்ளது.

  இந்தப் படிப்பகத்துக்கு சமீபத்தில் பெரியகுளம் எம்.பி. ஜே.எம். ஆரூண் புத்தகங்கள் வாங்க ரூ. 5 ஆயிரம் வழங்கினார்.

  இங்கு மாணவ, மாணவிகளுக்கு மாலை வேளைகளில் கல்வி கற்றுத் தரப்படுகிறது. திருக்குறளைப் பரப்பி இதன் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதுதான் இந்த படிப்பகத்தின் நோக்கம்.

  வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் இப் படிப்பகத்துக்கு அரசு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும்.

  ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த நாளில் இங்கு விழா கொண்டாடப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த திருவள்ளுவர் படிப்பகம் பொன் விழா காண உள்ளது என்றார்.

  அறிவுக்கண்ணைத் திறக்கும் பணியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் கன்னார் தெரு திருவள்ளுவர் படிப்பகத்தின் செயல்பாட்டை இப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.