மதுரையில் அதிகரித்து வரும் மனநோயாளிகள்!
மதுரை, ஜன. 31: மதுரை நகரில் சுற்றித் திரியும் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகம். இதுபோன்ற மனநோயாளிகளைப் பராமரிக்க அரசு மனநலக் காப்பகம் அமைக


மதுரை, ஜன. 31: மதுரை நகரில் சுற்றித் திரியும் மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகம். இதுபோன்ற மனநோயாளிகளைப் பராமரிக்க அரசு மனநலக் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்று மனிதநேய ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடும்பச்சூழல், மன அழுத்தம், நோய் உள்ளிட்ட பலவித காரணங்களால் மனிதர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது. மதுரை நகர் பகுதியில் இதுபோன்ற மனநல பாதிப்புக்கு உள்ளான பலர் சாலையோரம் இருப்பதைக் காணலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்குமிங்கும் ஓரிருவர் சுற்றித் திரிந்தனர். ஆனால், இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது மனிதநேய ஆர்வலர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.
ஓரளவு மனநிலை பிறழ்ந்தது போல் காணப்படும் பலரும், அவ்வப்போது தங்களையும் மீறி ஓலமிட்டவாறு நகரச் சாலைகளில் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.
சுற்றுலா நகரமாக திகழும் மதுரைக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டோரை காணும் அவர்கள் வருந்துகின்றனர்.
மதுரை ரயில் நிலையச் சாலையோரப் பகுதி, பை}பாஸ் சாலை, பெரியார், மாட்டுத்தாவணி பஸ் நிலைய வளாகப் பகுதிகள், புறவழிச்சாலைப் பகுதி, மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்புறப் பகுதி என பல இடங்களிலும் இவர்கள் சுற்றித் திரிகின்றனர்.
இவர்களில் பலரும் தாங்கள் எங்கிருந்து அழைத்து வரப்பட்டோம் என்ற சுயநினைவின்றி அழுக்கு உடையுடன், பரட்டைத் தலையுடன் அலைந்து திரிகின்றனர். இவர்களில் பலர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் பேசியவாறும் உலவுகின்றனர்.
தற்போது இளம்பெண்கள் சிலரும் இதுபோன்று சாலையோரம் காணப்படுவதால் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மனநிலை பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 10 சதவிகிதம் கூடிக்கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட அதிக மனநோயாளிகள் உள்ள இடங்களில் மதுரையும் இடம்பெற்றிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சென்னையைத் தவிர மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் அரசு மனநலக் காப்பகம் இல்லாத நிலை உள்ளது. மதுரையில் சாலையோரம் சுற்றித் திரிவோருக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில, உணவுப் பொட்டலங்களை வழங்கி உதவுகின்றனர்.
மதுரையில் மட்டும் சுமார் 500 மனநோயாளிகள் இருப்பதாக அக்ஷயா டிரஸ்ட் கிருஷ்ணன் கூறினார்.
மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள், முதியோர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேனில் சென்று காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் உணவுப் பொட்டலம் வழங்குகிறோம்.
மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மனநிலை பாதித்த நபர்களை உடன் அழைத்துவந்து இங்கு விட்டுவிட்டுச் செல்லும் அவல நிலையும் உள்ளது.
உணவுப் பழக்க வழக்கம், நடைமுறை வாழ்க்கை, பொருளாதாரத் தேடல், நோய் பாதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு சிலர் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றார் அவர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் 5 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த 113 மனநிலை பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் மூலம் உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், ஆனால், பிகார், ராஜஸ்தான், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் அவ்வப்போது மதுரை திருப்பரங்குன்றம், ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துவந்து விடப்பட்டுச் சென்றுவிடுவதாகவும் மாவட்ட அளவிலான அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆகவே, இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மனநலக் காப்பகங்களை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல விரும்பிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...