மானாமதுரை தாலுகா பகுதியில் பெரும் பகுதி விவசாயம் வைகைத் தண்ணீரை நம்பித்தான் உள்ளது. இந்தாண்டு இத் தாலுகா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையாலும் வைகையாற்றில் தொடர்ந்து 10 நாள்களாகத் திறக்கப்பட்ட தண்ணீரையும் பயன்படுத்தி விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை நடவு செய்தனர். தற்போது இப் பகுதி வைகை பாசனக் கண்மாய்களில் பல தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. திருப்புவனம் ஒன்றியம், கானூர் கண்மாய் பாசனத்தில் கானூர், மிக்கேல்பட்டினம், மீனாட்சிபுரம், கல்லூரணி, பச்சேரி, வேம்பத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 3,500 ஏக்கரில் உயர்வகை நெல் பயிர்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவற்றை நடவு செய்தனர்.