/

மின்சாரம் இல்லாமல் இயங்கும் கிரைண்டர்: பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு

மானாமதுரை, பிப். 25: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் இல்லாமல், கால்களால் இயக்கக்கூடிய வகையில் மாவு அரைக்கும் கிரைண்டரை கண்டுபிடித்துள்

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:39 pm

வாழ்வியல் வழிகாட்டி ஆர். கே

மானாமதுரை, பிப். 25: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் இல்லாமல், கால்களால் இயக்கக்கூடிய வகையில் மாவு அரைக்கும் கிரைண்டரை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒரே கருவியில் ஏர்கூலர், ஹீட்டர் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

 மானாமதுரை செய்களத்தூர் காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரியின் மெக்கானிகல் பிரிவு மூன்றாமாண்டு மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப உத்திகளைக் கையாண்டு, உடற்பயிற்சி செய்தவாறே காலால் இயக்கினால் சுழலும் மாவு அரைக்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்துள்ளனர்.

 சைக்கிள் வடிவமைப்பில் உடற்பயிற்சி சாதனம் போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரைண்டரில் ஒரு கிலோ அரிசி வரை அரைக்கலாம். கிரைண்டரில் ஊற வைத்த அரிசியையும் உளுந்தையும் போட்டு, சைக்கிள் சீட் போன்ற இருக்கையில் உட்கார்ந்து கொண்டு இருபுறமும் கால்களால் பெடல்களைச் சுற்றினால், கிரைண்டர் இயங்கத் தொடங்கி, மாவு அரைக்கப்படுகிறது.

 வீட்டில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் மின்சாரம் இல்லாதபோது மாவு அரைக்க விரும்பினால், இந்த கிரைண்டரை காலால் இயக்கினால், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கி உடலுக்கு வலு கிடைக்கிறது.

 இது குறித்து, இக் கல்லூரியின் முதல்வர் அசோகன், துறைத் தலைவர் புனிதக்குமார் ஆகியோர் தெரிவித்ததாவது:

 எங்கள் கல்லூரி மெக்கானிகல் பிரிவு மாணவர்கள் கண்டுபிடித்துள்ள மின்சாரம் இல்லாமல் காலால் இயக்கி சுழலும் கிரைண்டரில் ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ அரிசியை அரைக்கலாம். ஒரு கிரைண்டர் தயாரிக்க ரூ. 1,500 வரை செலவாகிறது.

 மேலும், சிறிய அளவிலான தண்ணீர் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கும் ஏர் கூலர் இயந்திரத்தையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒரு சுவிட்சை ஆன் செய்தால், குளிந்த காற்று கிடைக்கிறது. மற்றொரு சுவிட்சை ஆன் செய்தால், வெப்பம் வெளியாகிறது. இந்த இயந்திரத்தை சிறிய அறைக்குள் வைத்து குளிர் மற்றும் வெயில் காலங்களில் பயன்படுத்தலாம், இதைத் தயாரிக்க ரூ. 2500 செலவாகிறது என்றார்.

 இந்த இயந்திரங்களை உருவாக்கியுள்ள மாணவர்களை காமாட்சியம்மன் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் காத்தமுத்து, துணைத் தலைவர் சுந்தரி காத்தமுத்து மற்றும் ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.