ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன. 8: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த பெண் போலீஸ்காரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணைக்குப் பயந்து கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மொட்டமலை அகதிகள் முகாமில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11-வது அணி உள்ளது. இங்கு பெண் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் ஜான்சி என்கிற ஜான்சிராணி (24). இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த காமநாயக்கன்பட்டி.
இவரது கணவர் ஆரோக்கியராஜ். இவர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவருக்கு வேலை இல்லை.
இவர்களுக்கு 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது ஜான்சி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் மொட்டமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
ஜான்சியின் நடத்தையில் ஆரோக்கியராஜ் சந்தேகம் அடைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த பணத்தில் ரூ.500 குறைந்தது தொடர்பாக ஜான்சியிடம் ஆரோக்கியராஜ் வெள்ளிக்கிழமை கணக்கு கேட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஜான்சி தனது கணவர் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடனே மனைவியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு ஆரோக்கியராஜ் தப்பி ஓடிவிட்டார்.
வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது, அங்கு ஜான்சி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தார். தீயை அணைத்து அவரை ராஜபாளையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு நீதித்துறை நடுவரிடம் ஜான்சி வாக்கு மூலம் அளித்தார். இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை மதியம் உயிரிழந்தார்.
வன்னியம்பட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, போலீஸôர் தன்னைப் பிடித்துவிடுவார்கள் என்று பயந்து, கணவர் ஆரோக்கியராஜ், கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி கண்மாயில் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.