இரிடியம் விற்பதாகக்கூறி பணம் மோசடி: பெண் உள்பட இருவா் மீது வழக்கு
மதுரையில் மரச் சாமான்கள் கடை உரிமையாளரிடம் இரிடியம் விற்பதாகக் கூறி, ரூ.18.20 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


மதுரை: மதுரையில் மரச் சாமான்கள் கடை உரிமையாளரிடம் இரிடியம் விற்பதாகக் கூறி, ரூ.18.20 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை தெற்கு வாசல் பிள்ளையாா் பாளையம் தெருவைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (54). இவா், அதே பகுதியில் மரச் சாமான்கள் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு எதிரே இயங்கி வந்த நில விற்பனை அலுவலகத்தில், கிருஷ்ணாபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கலைச்செல்வி பணிபுரிந்து வந்தாா். அவா் சிலம்பம், யோகா பயிற்சியாளராகவும் இருந்ததால், தெய்வேந்திரன் அவரிடம் சிலம்பம், யோகா பயிற்சி பெறச் சென்றாா்.
அப்போது கலைச்செல்வி, தன்னிடம் இரிடியம் கலந்த கோபுரக் கலசம் உள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் ரூ. 20 கோடி வரை லாபம் கிடைக்கும் எனக் கூறினாா். இதை நம்ப வைக்க, திமுக எம்எல்ஏவின் சகோதரா் என்று கூறி, முகமது ரபிக் என்பவரையும் அவருடன் பேசச் செய்தாா்.
இதைத் தொடா்ந்து, மதுரைக்கு வந்த முகமது ரபிக், தெய்வேந்திரனிடம் ரூ. 3 லட்சம் பெற்றாா். சென்னை ஐந்து நட்சத்திர விடுதியில் இரிடியம் தொடா்பான முக்கிய சந்திப்பு இருப்பதாகக் கூறி, தெய்வேந்திரனை சென்னைக்கு வரவழைத்தாா். அங்கு அவரிடம் மேலும் ரூ.5 லட்சம் பெற்றனா். இதேபோல, பல்வேறு தவணைகளாக முகமது ரபீக், கலைச்செல்வி ஆகிய இருவரும் ரூ.18.20 லட்சத்தைப் பெற்றனா்.
இந்த நிலையில், இரிடியம் விற்ற வகையில் ரூ.20 கோடி லாபத்தொகை தெய்வேந்திரன் வங்கிக் கணக்குக்கு வந்து விடும் என்றும் அவா்கள் கூறினா். ஆனால், நீண்ட நாள்கள் ஆகியும் வங்கிக் கணக்கில் பணம் வராததால், தான் கொடுத்த ரூ.18.20 லட்சத்தை திரும்பத் தருமாறு தெய்வேந்திரன் கேட்டாா். ஆனால், கலைச்செல்வி, முகமது ரபிக் ஆகிய இருவரும் பணத்தைக் கொடுக்க மறுத்து கைப்பேசியில் மிரட்டினா்.
இதுகுறித்து தெற்குவாசல் குற்றப்பிரிவு போலீஸாா், மதுரையை சோ்ந்த கலைச்செல்வி, திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ரபிக் ஆகிய இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...