பழனி கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரம்: ஆட்சியா் விளக்கம் அளிக்க உத்தரவு
பழனி கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு:
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவா்.
இந்தக் கோயிலின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். அப்போது, கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனா். எனவே, கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவின் முந்தைய விசாரணையின் போது, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை கோயில் கிரிவலப் பாதையில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்தப் பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கவும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வருவாய்த் துறை தரப்பில், ஆக்கிரமிப்பு அகற்றம் நடவடிக்கை விவகாரத்தில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்பாளா்கள் தரப்பில்கூட கால அவகாசம் கோரவில்லை. அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கிறீா்கள். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

