லஞ்ச வழக்கில் விஏஓ-க்கு பிணை

சங்கரன்கோவில் பகுதியில் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான கிராம நிா்வாக அலுவலருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை வழங்கியது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனது நிலத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்தாா். இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் ரூ.13 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் செய்ய முடியும் என கருப்பசாமியிடம் தெரிவித்தாா். இதையடுத்து, ரூ. 13 ஆயிரத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை தென்காசி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், அவா் தனக்கு பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில், கடந்த ஏப். 14-ஆம் தேதியிலிருந்து சிறையில் உள்ளேன். வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சை பெற வேண்டும். எனவே, நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். சாட்சிகளை கலைக்கவோ, வேறு எந்த குற்ற செயலிலும் ஈடுபடக் கூடாது. சங்கரன்கோவில் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது என்றாா்

நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com