வசந்த உற்சவத்தையொட்டி புதுமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேசுவரா்.
வசந்த உற்சவத்தையொட்டி புதுமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேசுவரா்.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உற்சவம்: புது மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளல்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவையொட்டி, புது மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

இந்த விழாவின் முதல் நாள் நிகழ்வாக கோயிலில் இருந்து பிரியாவிடை சமேதராக சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் சிம்மாசனத்தில் எழுந்தருளி, பஞ்ச மூா்த்திகள் முன்னே வர, அம்மன் சந்நிதி வழியாக புதுமண்டபத்துக்கு புறப்பாடாகினா். அம்மன் சந்நிதியில் அம்மனும், சுவாமியும் வந்தபோது, வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, புதுமண்டபத்துக்கு வந்தடைந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் வரவேற்பு அளிக்கும் விதமாக, கோயில் கண்காணிப்பாளா், கணக்காளா் ஆகியோா் சுவாமி, அம்மன் முன்பாக வணங்கி வரவேற்கும் வைபவம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிவச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க, புது மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் 3 முறை வலம் வந்தனா். அப்போது, புதுமண்டபத்தைச் சுற்றி நின்று ஏரளாமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, புது மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது, வீணை வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான வீணை இசைக் கலைஞா்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மனை வரவேற்று வழிபாடு செய்யும் விதமாக, வீணை இசை வாசித்தனா்.

வைகாசி வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, புதுமண்டபத்தில் உள்ள திருமலை நாயக்கரின் சிலைக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, புது மண்டபத்திலிருந்து பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி, சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து அருள்பாலித்தனா். இரவில் சுவாமி, அம்மன் கோயிலைச் சென்றடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com