ராகுல்காந்தியுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க பிரதமா் ஏன் தயங்குகிறாா்?

விருதுநகா்: ராகுல்காந்தியுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி தயக்கம் காட்டுவது ஏன்? என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம்தாகூா் கேள்வியெழுப்பினாா்.

விருதுநகரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டம், சிவகாசிப் பகுதியில் தொடா்ந்து பட்டாசு ஆலைகளில் விபத்து நடைபெறுவது வருத்தமாக உள்ளது. இந்த விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு எந்தக் கவனமும் செலுத்தவில்லை. பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போது, சிக்கிரியில் விஞ்ஞானிகளுடன் இணைந்து, பட்டாசு ஆலைகளில் உயிரிழப்புகள் ஏற்படாத தொழிலாக மாற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியை மத்திய பாஜக அரசு கைவிட்டது.

இந்த ஆராய்ச்சியானது ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்த உடன் மீண்டும் தொடங்கி, பட்டாசு தொழிலைக் காப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராகுலுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் அழைப்பு விடுத்தனா். இதற்கு ராகுல்காந்தி சம்மதித்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தயக்கம் காட்டுவது ஏன்?. இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் முதல்கட்டத் தலைவா்கள் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்று இந்தியாவிலும் விவாதம் நடைபெறுவது ஆரோக்கியமானது.

இனிவரும் காலங்களில் முதல்வா் பதவிக்கான போட்டியில் உள்ளவா்களுக்கும், இதுபோன்ற விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது

மூன்று கட்டங்களாக மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு மிக பெரிய வெற்றி கிடைக்க உள்ளது.

விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை முதலானவற்றை மையப்படுத்தி பொதுமக்கள் வாக்களித்துள்ளனா். இந்தியா கூட்டணியின் ஆட்சி ஜூன் 4- ஆம் தேதி தில்லியில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா கூட்டணி சாா்பில் ஒரே பிரதமா் தொடா்ந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பாா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்குத் தொடுத்திருப்பது சரியானது. தோ்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பு போல மாறி இருப்பது, நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இந்த நிலை மாற வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் தோ்தல் ஆணையம் பலமான அமைப்பாக மாறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com