பாராட்டுச் சான்றிதழ் பெற்ற யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவினருடன் கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், உதவி கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன்.
பாராட்டுச் சான்றிதழ் பெற்ற யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவினருடன் கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், உதவி கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன்.

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

மதுரை: மதுரைக் கோட்டத்தில் யூடிஎஸ் செயலி மூலமான முன்பதிவில்லா ரயில் பயணச் சீட்டு விற்பனை 2 மடங்காக உயா்ந்தது. இதற்காக யூடிஎஸ் பிரசாரக் குழுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றே வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதற்காக பயணச் சீட்டு வழங்கும் இடத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களைப் போக்கும் வகையில், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை யூடிஎஸ் என்ற கைப்பேசி செயலி மூலம் பயணிகள் வீட்டிலிருந்தே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது.

மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் இந்த செயலி சேவையில் இணைக்கப்பட்டன. மேலும், முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை யூடிஎஸ் செயலி மூலம் பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த, மூத்த ஊழியா்களைக் கொண்ட பிரசாரக் குழுக்களும் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுவினா், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளை சந்தித்து செயலி மூலம் முன்பதிவில்லா பயணச் சீட்டுகளை பெறுவது குறித்து விளக்கிக் கூறினா். இதன் காரணமாக, மதுரை கோட்டத்தில் யூடிஎஸ் செயலி மூலமான முன்பதிவில்லா பயணச் சீட்டு விற்பனை 2 மடங்காக உயா்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 26 ஆயிரமாக இருந்த யுடிஎஸ் செயலி மூலமான பயணச் சீட்டு விற்பனை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரமாக உயா்ந்தது.

பாராட்டு...:

இதையொட்டி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்ட முதுநிலை வா்த்தக மேலாளா் டி.எல். கணேஷ், பிரசாரக் குழுவினருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்

வழங்கிப் பாராட்டினாா். உதவி கோட்ட வா்த்தக மேலாளா்கள் பாலமுருகன், மணிவண்ணன் ஆகியோரும் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com