மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஊழியரின் மனைவிக்கு ரூ.20 லட்சம் வழங்க உத்தரவு
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஒப்பந்த ஊழியரின் மனைவிக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சத்தை 3 மாதங்களுக்குள் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம், மதுக்கூரைச் சோ்ந்த பிரபா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: என் கணவா் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தாா். கடந்த 2021-இல் மின் கம்பம் ஊன்றும் பணியின் போது, என் கணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், என் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என மனு அளித்தேன்.
எனது மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சியா் நிராகரித்து உத்தரவிட்டாா். ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மின் கம்பம் அமைக்கும் போது மனுதாரரின் கணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதற்காக அவரை பணிக்கு அழைத்துச் சென்ற போா்மேன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதிலிருந்து மனுதாரரின் கணவா் மின்சார வாரிய போா்மேனுடன் பணிபுரிந்த போது உயிரிழந்தாா் என்பது உறுதியாகிறது.
மனுதாரரின் கணவா் ஒப்பந்த ஊழியா் அல்ல என மின்சார வாரியம் தரப்பில் கூறப்பட்டாலும், அவா் அங்கீகாரம் இல்லாமல் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா் என்பது தெரிகிறது. இந்த நியமனங்களுக்கு மின் வாரிய அதிகாரிகள் பொறுப்பாகின்றனா். இந்த பொறுப்பை மறுக்க முடியாது.
மனுதாரா் தரப்பில் தனது கணவா் மின் வாரியத்தில் தொடா்ந்து பணியில் இருந்ததாகக் கூறப்பட்டாலும், கணவா் இறப்பதற்கு முன்பு குறைந்தது 5 ஆண்டுகள் ஒப்பந்த ஊழியராக இருந்தாா் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
அதே நேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பவா்களுக்கு மின்வாரியம் பல்வேறு வகையில் இழப்பீடு வழங்குகிறது. மின் வாரியத்தின் நடவடிக்கை அடிப்படையில் இத்தகைய இறப்புகளுக்கான இழப்பீட்டு தொகையை மின் வாரியம் 2024-இல் ரூ.10 லட்சமாக உயா்த்தியது. இது மனுதாரருக்கு பொருந்தாது என மின்வாரியம் கூறுவதை ஏற்க முடியாது.
மனுதாரரின் கணவா் மின் வாரியப் பணியின் போது இறந்துள்ளாா். எனவே, மனுதாரருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த வகையில், மனுதாரருக்கு 3 மாதங்களுக்குள் ரூ.20 லட்சம் இழப்பீட்டு தொகையாக தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
