திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தேரோட்டம்: மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

திருப்பரங்குன்றம் கோயிலில் காா்த்திகை தேரோட்டம்: மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம்

Published on

திருப்பரங்குன்றம் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை காலையில் தேரோட்டமும், மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 25- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை மலை மேல் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக காலையில் உத்ஸவா் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு சுவாமி, தெய்வானையுடன் முத்தங்கி அலங்காரத்தில் சிறிய வைரத் தேரில் எழுந்தருளினாா். அப்போது, பக்தா்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து தோ் நிலையை அடைந்தது. தொடா்ந்து மாலை 5 மணிக்கு மூலவா் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கம்பத்தடி மண்டபத்தில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மூலவருக்கு மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் மலை மீது 4 அடி உயரமுள்ள தாமிர கொப்பரையில் 450 லிட்டா் நெய், 250 மீட்டா் நீளம் கொண்ட காடா துணியாலான திரியில் 5 கிலோ கற்பூரம் வைத்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ‘அரோகரா...’ பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனா். அப்போது திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மலை மீது மகா தீபத்தை தரிசித்து விட்டு தங்கள் வீடுகளில் காா்த்திகை விளக்கேற்றினா். இரவு 7 மணியளவில் 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பன் கொளுத்தப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராமத்தினா் விவசாயம் செழிக்க வேண்டி எரிந்த சொக்கப்பான் சாம்பலை தங்கள் வயல்களில் இட எடுத்துச் சென்றனா். இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்தாா்.

விழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பகல் 12 மணிக்கு விடையாத்தி சப்பரத்தில் புறப்பாடும், தீா்த்த உத்ஸவமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலா்கள் வ. சண்முகசுந்தரம், மணிச்செல்வம், துணை ஆணையா் யக்ஞ நாராயணன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com