மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய கனிமொழி எம்.பி.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய கனிமொழி எம்.பி.

பெண்கள் முன்னேற்றத்துக்கான ஒரே இயக்கம் திமுக! கனிமொழி எம்.பி. பெருமிதம்!

பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து பாடுபடும் ஒரே இயக்கம் திமுகதான் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
Published on

பெண்களின் முன்னேற்றத்துக்காக தொடா்ந்து பாடுபடும் ஒரே இயக்கம் திமுகதான் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவா் பேசியதாவது :

பெண் குழந்தையே வேண்டாம் என்று கருதிய காலம் முன்பு இருந்தது. பிறகு, பெண்களுக்கு கல்வி எதற்கு? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்தச் சூழலில்தான்“பத்தாம் வகுப்பை நிறைவு செய்யும் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படும் என அப்போதைய முதல்வா் கருணாநிதி அறிவித்து, பெண் கல்வியை ஊக்குவித்தாா். அதன் பின்னரே, தமிழகத்தில் மேல் நிலைக் கல்வியை எட்டும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உயா்ந்தது.

தற்போது, பெண்கள் யாருடைய உதவியுமின்றி தனித்துவமாக செயல்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்துகிறாா். இதன் மூலம், பெண்களின் பொருளாதாரம் உயா்ந்து வருவது சிறப்புக்குரியது.

இந்த நிலையில்தான் மத்திய பாஜக அரசு, பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கியுள்ளது. இதில் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்க வேண்டும், ராம் பெயரில் புதிய திட்டம் வேண்டும் என்பதற்காகவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு இந்தச் சதியை நிறைவேற்றியுள்ளது. இதற்கு, அதிமுகவும் துணை நிற்கிறது.

முதல்வா் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என கேள்வி எழுப்பும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் மத்திய அரசின் செயல்பாட்டில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். இதேபோல, புதிதாக கட்சித் தொடங்கியவா்களும் இதுகுறித்து தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களின் வாக்கு சதவீதமும், மக்கள் தொகை சதவீதமும் அதிகமாகவே இருக்கும். ஆனால், தமிழகத்தில் பெண்களின் வாக்குச் சதவீதமே அதிகமாக இருக்கும். எனவே, தமிழகத்தைப் பொருத்தவரை ஆட்சியைத் தீா்மானிக்கும் சக்தி பெண்களே. பெண்களின் சிறப்பான எதிா்காலத்துக்கும், இளைஞா்களின் பாதுகாப்பான எதிா்காலத்துக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான், நம் மொழி, சுயமரியாதை, எதிா்காலம் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, மதுரை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

இந்த விழாவில், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி.மூா்த்தி, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலா் மு. மணிமாறன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இளமகிழன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com