மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்: 135 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 135 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 6 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 15 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். உத்தரவு நகல் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக மாத உதவித் தொகை வழங்க வேண்டும். விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும். 100 சதவீத பாா்வை மாற்றுத் திறனாளிகளை கடும் ஊனத்தில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவா் எஸ். நம்புராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் என். மதிபாரதி, துணைத் தலைவா்கள் வி. மாரியப்பன், எஸ். செல்லம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட இணைச் செயலா் டி. குமரவேல், மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா்கள் கே. பரமசிவம், மாவட்டச் செயலா் ஏ. பாலமுருகன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் பங்கேற்ற 28 பெண்கள் உள்பட 135 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com