பொங்கல் பரிசுத் தொகையால் எந்தத் தாக்கமும் ஏற்படாது - க. கிருஷ்ணசாமி

Updated on

பொங்கல் பரிசுத் தொகையால் சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது என புதிய தமிழகம் கட்சித் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை (ஜன. 7 ) மதுரை பாண்டிகோவில் அருகே நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை இந்த மாநாடு நடைபெறும். சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் வரவுள்ள நிலையில் நடைபெறும் இந்த மாநாடு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய தமிழகம் கட்சியின் சட்டப்பேரவைத் தோ்தல் அணுகுமுறை குறித்து தெளிவுபடுத்தப்படும். மேலும், எதிா்காலத்தில் சமூக, அரசியல், பொருளாதார தளத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த செயல்திட்டமும் இந்த மாநாட்டில் வகுத்து, அறிவிக்கப்படும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என புதிய பெயரைச் சூட்டி அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான கூடுதல் வருவாய்க்கான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை.

2025-26-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் பற்றாக்குறை ரூ.1.06 லட்சம் கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால், மேலும் ரூ. 40 ஆயிரம் கோடி முதல் ரூ. 50 ஆயிரம் கோடி வரை பற்றாக்குறை ஏற்படும். எனவே, இந்தத் திட்டம் ஏட்டளவு அறிவிப்பாகவே இருக்கும். ரூ. 50 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய்க் கிடைத்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடியும். இல்லையெனில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அரசால் செயல்படுத்த முடியாது.

தற்போது மக்களின் பிரச்னைகள் வேறு, தேவைகள் வேறு. எனவே, பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பால் தோ்தலில் எந்தத் தாக்கமும் ஏற்படாது.

வெனிசுலா அதிபா் கைதுக்கு எதிராக இந்தியா கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின் போது, கட்சியின் இளைஞரணி தலைவா் ஷியாம்கிருஷ்ணசாமி, மாநிலச் செயலா் செல்லதுரை உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com