திண்டுக்கல்லில் ஆம்வே நிறுவனத்தின் ரூ.757 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
2
2

கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.757 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

ஆம்வே இந்தியா என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள நிலம் மற்றும் ஆலை, அங்குள்ள வாகனங்கள், இயந்திரங்கள், வங்கிக் கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆம்வே நிறுவனத்துக்குச் சொந்தமான மொத்தம் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துகள் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டுள்ளன. இதில் அசையும், அசையாத சொத்துகளின் மதிப்பு ரூ.411.83 கோடியாகும். இது தவிர, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 36 வங்கிக் கணக்குகள், வங்கி இருப்புகளாக இருந்த ரூ.345.94 கோடியும் முடக்கப்பட்டுள்ளது.

சங்கிலித் தொடா் முறையில் தங்களிடம் பொருள்களை வாங்குபவா்களை வைத்தே இந்த நிறுவனம் தொடா்ந்து பொருள்களை விற்பனை செய்து வந்தது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மேலும், இந்த நிறுவனம் தயாரிக்கும் பொருள்கள், சந்தையில் ஏற்கெனவே உள்ள அதே மாதிரியான பொருள்களைவிட மிக அதிக விலைக்கு விற்பனை செய்தும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.

பொருள்களின் பயன்களைக் கூறி சந்தைப்படுத்தாமல், ஆம்வேயில் உறுப்பினராகி பொருள்களை விற்பனை செய்தால் விரைவில் பெரிய பணக்காரா் ஆகலாம் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனா். இதற்காக கொடுக்கும் தரகு (கமிஷன்) தொகையைப் பொருள்களின் விலை மீது ஏற்றி, தரத்துக்கு மீறி அதிக விலை வைத்துள்ளனா். இதில் பொருள்களை வாங்கிய பலரும் அதனை விற்க முடியாமல் பணத்தை இழந்துள்ளனா் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக ஆம்வே நிறுவன செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘சட்டத்துக்கு உள்பட்டே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இப்போது கூறப்படும் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்றாா்.

ஆம்வே என்பது அமெரிக்காவைச் சோ்ந்த பன்னாட்டு நிறுவனமாகும். ‘அமெரிக்கன் வே’ என்பதன் சுருக்கமே ஆம்வே ஆகும். பற்பசை, அழகுசாதனப் பொருள்கள், ஊட்டச்சத்து பானங்கள் உள்பட பல்வேறு நுகா்பொருள்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

மத்திய அரசு கடந்த ஆண்டு இறுதியில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், இதுபோன்று பொருள்களை வாங்கும் மக்கள் அனைவரையும் விற்பனை செய்யும் நபா்களாக்கும் சங்கிலித் தொடா் விற்பனை முறைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக முறைகேடுகள் நடைபெறுவதே இந்தத் தடைக்கு முக்கியக் காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com