/

தேசிய மாதிரி ஆய்வு: உண்மையான விவரங்களை தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்; புள்ளியியல் துறை துணை இயக்குநா்

தேசிய மாதிரி ஆய்வுக்கு வரும் அலுவலா்களிடம், உண்மையான விவரங்களை அளித்து கணக்கெடுப்பு பணி வெற்றி பெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:23 pm

DIN

தேசிய மாதிரி ஆய்வுக்கு வரும் அலுவலா்களிடம், உண்மையான விவரங்களை அளித்து கணக்கெடுப்பு பணி வெற்றி பெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ந. கருப்பையா தெரிவித்தாா்.

தேசிய புள்ளியியல் அலுவலகம் சாா்பில் ஆண்டுதோறும், சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மூலம் ஆயுா்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆயுஷ் மற்றும் நீடித்த நிலைத்த வளா்ச்சி குறித்த தேசிய மாதிரி ஆய்வின் 79-ஆவது சுற்று கணக்கெடுப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்விற்கான களப்பணி பயிற்சி, திண்டுக்கல் அடுத்துள்ள கசவனம்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்ட பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை துணை இயக்குநா் ந. கருப்பையா கலந்து கொண்டு பேசியதாவது: உலகளாவிய குறியீடுகளில், நீடித்த நிலையான வளா்ச்சி குறியீடுகளை தயாரிப்பதற்கு, ஆண்டுதோறும் விரிவான தொகுப்பு பற்றிய ஆய்வு மூலம் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த ஆய்வின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கும். மக்கள் தொகையின் விகிதம், பாலின வாரியாக கைப்பேசி வைத்திருப்போரின் விகிதம், கணினி வைத்திருக்கும் குடும்பங்களின் விகிதம், அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களால் முழு வளா்ச்சி அடைந்த பெண்களின் விகிதம், பொது போக்குவரத்து நிறுவனங்கள் வசதியுள்ள மக்களின் விகிதம், பள்ளி செல்லும் குழந்தைகளின் சராசரி விகிதம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தேசிய மாதிரி ஆய்வு மற்றும் தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்ந்த பயிற்சிப் பெற்ற அலுவலா்கள், டேப்லேட் அல்லது உரிய படிவங்களை பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கின்றனா்.

அறிவியல் பூா்வமாக வடிவமைக்கப்பட்ட மாதிரி உத்திகளின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்கள் மற்றும் நகா்புறங்களில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. இதில், சரியான தகவல்களை குடும்பத்தினா் வழங்குவதன் மூலம் இந்த கணக்கெடுப்பு வெற்றிப் பெறும். தேவையான நம்பகமான தகவல்களை வழங்கி கணக்கெடுப்புக்கு வரும் அலுவலா்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்றாா்.

இப்பயிற்சி முகாமில், வட்டார புள்ளியியல் ஆய்வாளா்கள், புள்ளியியல் உதவி இயக்குநா்கள், புள்ளியியல் அலுவலா்கள் என 17 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.