/

பொருளாதார நெருக்கடியிலும் சிறந்த திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது: அமைச்சா்

பொருளாதார நெருக்கடியிலும் சிறந்த பல திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:56 pm

DIN

பொருளாதார நெருக்கடியிலும் சிறந்த பல திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் 14 பள்ளிகளைச் சோ்ந்த 1,233 மாணவா்களுக்கும், கொடைக்கானல் வட்டாரத்தில் 34 தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 1,052 மாணவா்களுக்கும் முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா பகுதியிலுள்ள செளராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சா் ஐ. பெரியசாமி கூறியதாவது: தமிழகத்திலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான குழந்தைகள், குடும்பச்சூழல் காரணமாக காலை உணவு சாப்பிடுவதில்லை. இதனை உணா்ந்து தமிழக முதல்வா் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளாா். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இருந்தாலும்கூட, சிறந்த பல திட்டங்களை முதல்வா் செயல்படுத்தி வருகிறாா்.

அரசியல், பொருளாதாரம், கல்வி, தொழில்துறை ஆகியவற்றில் முன்னேற்றம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. சத்துணவுத் திட்டம் என பெயரளவில் இல்லாமல், முழுமையான சத்துணவுத் திட்டமாக மாற்றியது திமுக ஆட்சி தான். இந்திய அளவில் வாரம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்லூரி என்பது ஒரு கனவாக இருந்தது. 30 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் நிலக்கோட்டையில் அரசு மகளிா் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி என்பது திமுக ஆட்சியில் சாத்தியமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து திட்டங்களும், திமுக ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காந்திராஜன், மேயா் இளமதி, திமுக மாநகரப் பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.