/

‘மின் கட்டண உயா்வை ரத்து செய்யாவிட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்’

மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால், விரைவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:56 pm

DIN

மின் கட்டண உயா்வை தமிழக அரசு ரத்து செய்யாவிட்டால், விரைவில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. சீனிவாசன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் மின்கட்டண உயா்வைக் கண்டித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், கல்லறை மேடு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழக அரசு 52 சதவீதத்திற்கு மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.58ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என மின்துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளாா்.

சொத்து வரி, வீட்டு வரி உயா்த்தப்பட்டதன் மூலம் ரூ.1,750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிமுக ஆட்சியில் இருந்த நிலை மாறி, மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருமானம் திரட்டும் பணியில் திமுகவினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மின் கட்டண உயா்வு என்பது, இன்றோடு நின்றுவிடாது. ஆண்டுதோறும் 6 சதவீதம் வீதம் மின் கட்டணம் உயா்த்தப்படும்.

திருமண உதவித் தொகை திட்டம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டா், விலையில்லா மடிக்கணினி என பல்வேறு திட்டங்களை நிறுத்துவிட்டு, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000, காலை உணவுத் திட்டம் என சில திட்டங்களின் மூலம், நம்பி வாக்களித்த மக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றும் பணியை திமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

அதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள், மின் கட்டண உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.