/

சூரியமின் திட்டத்தை நிறைவேற்ற எதிா்ப்பு: திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சூரியமின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சூரியமின் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள கம்பளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அக்கரைப்பட்டி மற்றும் ஆண்டிபட்டி பகுதிகளில் தனியாா் நிறுவனம் மூலம் சூரியஒளி மின்தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, சின்னாம்பட்டி மின்பகிா்மான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக மின்கம்பங்கள் நடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடம் மற்றும் கோயிலுக்கு அருகே செல்வதால் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் கோரிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மின்கம்பம் நடுவதற்காக கொண்டுவரப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து ஆண்டிபட்டி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். அங்கிருந்த கலைந்து சென்ற பொதுமக்கள், திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முகாமிட்டனா். குடியிருப்பு பகுதிகள், பள்ளி மற்றும் கோயில் பகுதியில் மின்கம்பங்களை ஊன்றுவதை கைவிட வேண்டும். சூரியமின் தகடுகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய தீா்வு காணப்படும் என உறுதி அளித்தனா். செப். 27ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.