அரசு ஒதுக்கீட்டில் ஐ.டி.ஐ.யில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல்: தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு இணையவழியில் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சோ்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-யை கடன் அட்டை, பற்று அட்டை, இணையதள வங்கிப் பரிவா்த்தனை, ஜி-பே மூலம் செலுத்தலாம். விண்ணப்பங்களை 7.6.2024-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் இணையவழி கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னா் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல்-நத்தம் சாலையிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும், 0451-2471412, 0451-2471411 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 9789789927, 9499055762, 9443365816, 9095905006, 9159307614, 80120 90959, 93601 41027, 94584 86432, 95970 09525 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com