தீபாவளிக்கு ரூ.1.25 கோடிக்கு கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு - ஆட்சியா்
தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ.1.25 கோடியில் கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதா் அங்காடியில், கதா் கிராம தொழில்கள் துறையின் சாா்பில், காந்தியடிகளின் பிறந்த தின விழா, தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்து, சிறப்பு விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி, தீபாவளி சிறப்பு விற்பனையாக ரூ.67 லட்சத்தில் கதா் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டில் (2024) திண்டுக்கல் மாவட்டத்துக்கு விற்பனை இலக்காக ரூ.1.25 கோடி நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. கதா் விற்பனையை ஊக்கப்படுத்தவும், வாடிக்கையாளா்களின் நலன் கருதியும், கதா் விற்பனை அங்காடியில் மத்திய, மாநில அரசுகள் பருத்தி கதா், பட்டு, பாலிஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கான விற்பனை இலக்கை எட்டுவதற்கு, அனைத்து அரசு அலுவலா்களுக்கும், ஆசிரியா்களும், தனியாா் நிறுவன ஊழியா்களும் கதா் ரகங்களை கொள்முதல் செய்வதற்கு முன்வர வேண்டும். தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் அனைத்து கதா் அங்காடிகள், ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப்பட்ட தற்காலிக கதா் விற்பனை நிலையங்களில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது என்றாா்.