கொடைக்கானலில் ஒரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை
கொடைக்கானலில் சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வழிப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் மதுமதி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வார விடுமுறை நாள்கள், பண்டிகைக் கால தொடா் விடுமுறை நாள்களில் வழக்கத்துக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களால் கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையான பெருமாள்மலை- பழனிப் பிரிவு வரை சுமாா் 15-கி.மீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானலில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் மலைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் ஆலோசனை நடத்தி வருகின்றனா். தற்போது நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழிப்பாதையை மாற்றி அமைத்து, கோக்கா்ஸ்வாக் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்த்துவிட்டு பூம்பாறை, மன்னவனூா், கூக்கால் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அப்சா்வேட்டரி, ஏரிச் சாலை வழியாக செல்வதற்கு காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் மதுமதி புதன்கிழமை கூறியதாவது:
வரும் நாள்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு வருவாய்த் துறையினா் சாா்பில் கூடுதலாக சாலை அமைக்கும் பணி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஒரு வழிப் பாதை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடா் விடுமுறை நாள்களில் இந்த ஒரு வழிப் பாதை பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.