செவிலியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆா்பி செவிலியா்கள்.
திண்டுக்கல், டிச.24: திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, திண்டுக்கல்லில் செவிலியா்கள் புதன்கிழமை 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை வகித்த எம்ஆா்பி செவிலியா் சங்கத்தின் பழனி வட்டத் தலைவா் கலா முருகேசன் பேசியதாவது:
திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி எம்ஆா்பி தொகுப்பூதிய செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயா்நீதிமன்ற தீா்ப்பின் மீதான மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆனாலும், மாவட்டத் தலைநகரங்களில் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினருடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையின்போது 723 பேரை பணி நிரந்தரம் செய்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தாா்.
மாநிலம் முழுவதும் 8,600 எம்ஆா்பி செவிலியா்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் நிலையில், அமைச்சரின் வாக்குறுதி ஏற்புடையதாக இல்லை. அதனால், காத்திருப்புப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபடுகிறோம் என்றாா் அவா்.
