கொடைக்கானல் வனப் பகுதியில் தடுப்பணைகள் அமைக்கக் கோரிக்கை

Published on

கொடைக்கானல் வனப் பகுதியில் வன விலங்குகளுக்காக சிறிய தடுப்பணைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரம், மேல்மலை, கீழ்மலை குடியிருப்புப் பகுதிகள், விவசாயத் தோட்டங்களில் காட்டு யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் சாதாரணமாக உலா வருகின்றன. இவற்றின் இனப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், உணவு, குடிநீா் ஆகியவற்றை தேடி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அவை வருகின்றன.

வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீா் தேக்கி வைக்கக் கூடிய சிறிய தடுப்பணைகளையும், புல் வெளிகளையும் உருவாக்கினால் வன விலங்குகளை வனத்திலிருந்து இடம் பெயராமல் தடுக்க முடியும். இதற்கு மாவட்ட வனத் துறை நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் பகுதி சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆடலூா் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் உள்பட

2 பெண்கள் காட்டு மாடு தாக்கி இறந்தனா். கொடைக்கானல் பணிமனைக்குச் செல்லும் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கா்ப்பிணி காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். தாண்டிக்குடி-பண்ணைக்காடு மலைச் சாலையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை விரட்டி வருகிறது.

எனவே, வன விலங்குகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் வனத்திலேயே கிடைக்கும் வகையில், தடுப்பணைகள் அமைப்பதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com